Logo

 

வால்பாறை சுற்றுலா தலங்கள்

வால்பாறை சுற்றுலா

கோவை மாவட்டததுக்கு பெருமைசேர்க்கும் முக்கிய இடங்களில் வால்பாறையும் ஒன்று. 7வது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள், எங்கு பார்த்தாலும் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள, ஆங்காங்கே வெள்ளி கம்பியை நீட்டியதுபோல் ஆங்காங்கே மலைகளில் இருந்து ஒடி வரும் அருவிகள், ஆற்று தண்ணீரை தடுத்து சேமிக்கும் பிரமாண்ட அணைகள் என்று வால்பாறை நகரம் சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

வால்பாறை நகரை பற்றி்.

வால்பாறை என்ற ஒரு இடம் இருப்பதை 1880ம் ஆண்டு காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் தான் வெளி உலகுக்கு தெரிய வந்தது. 1920 ல் காட்டு பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிகளின் உதவியுடன் புதர் காடுகளை அகற்றி நடை பாதைகள் ரோடுகளாக மாற்றப்பட்டன, மேலும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டது. வால்பாறை மலைப்பகுதியில் அரியவகை மூலிகைகளும் ஆட்களே நுழைய முடியாத அடர்ந்த காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகள், பசுமை படர்ந்த புல்வெளிகளும், ஆனைமலை புலிகள் காப்பகமும் வால்பாறை நகருக்கு பெருமை சேர்க்கின்றன. மற்ற மலைவாசல் தலங்களைவிடவும் வால்பாறையில் இயற்கை எழில் கொட்டிக்கிடக்கிறது.

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள்.

வால்பாறையில் இருந்து 10 கி.மீ தொலைவில் லோயர் நீராறு அணை உள்ளது. இயற்கை கொஞ்சும் மலைப்பகுதியில் அமைந்து உள்ள இந்த லோயர் நீராறு அணை தற்போது நிறைந்த கடல்போல் காட்சி அளிக்கிறது. இதை காண கண்கோடி வேண்டும். இந்த லோயர் நீராறு அணை நூற்றுக்கணக்கான நிலங்களையும் செழிக்கவைத்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்து வருகிறது.

இதைபோல் வால்பாறையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சின்னக்கல்லார் அணை இந்த அணை வற்றாத ஜீவநீர் வீழ்ச்சிகளை தனது நீர்பிடிப்பு பகுதியாக கொண்டு இருப்பதால் எப்போதும் அணையில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். மேலும் சின்னக்கல்லாருக்கு என்று ஒரு சிறப்பம்சம் உண்டு. மற்ற இடங்களைகாட்டிலும் வருணபகவானுக்கு சின்னக்கல்லார் மீது காதல் உண்டு. அதனால் தான் மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு ஆண்டு தோறும் அதிக மழை பெய்து வருகிறது.

கூழாங்கல் ஆறும் சுற்றுலாப்பயணிகளிடம் சிறப்பு இடம் பிடித்து உள்ளது.சுற்றுலாப்பயணிகள் இந்த ஆற்றின் பாதுகாப்பான பகுதிகளில் குழியல் போடுவதை விரும்புகின்றனா். மேற்கண்ட சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் வால்பாறை - சின்னக்கல்லார் சாலையில் அமைந்துள்ளன.

இதேபோல் வால்பாறையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் முழுவதும் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு வெள்ளை விநாயகர் திருக்கோவில் என்றும் பெயர். கோவிலை சுற்றிலும் அழகிய ரோஜா செடிகளால் பூங்கா அமைத்து உள்ளனர். முழு முதற்கடவுளான விநாயகபெருமான் இன்னும் ரோஜா மலர் பூங்காவுக்கும் நடுவில் கொலுவீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதே போல் நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சியில் (வியூ) மலைவாழ் மக்களான முதுவர் இனத்தவர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இங்கு நீர்வீழ்ச்சியும், புல்வெளியும், எழில்கொஞ்சும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன.

இதேபோல் ஆன்மீகத்தின் உறைவிடமாக அமைந்து உள்ள கருமலை பாலாஜி கோவில் தென்திருப்பதியை போலவே மலையில் அமைந்து உள்ள இந்த கோவிலை சுற்றிலும் மலர்கள் பூத்து குலுங்கி நறுமணம் வீசும் அழகிய பூங்காவும், கோவில் அருகே இறைச்சல்பாறை என்ற அழகிய நீர்வீழ்ச்சியும் அமைந்து உள்ளது. இந்திய நாட்டின் பொக்கிஷமாக திகழும் அக்காமலை புல்வெளியும் இங்குதான் உள்ளது. இந்த பகுதியின் சுற்றுப் புறசூழல் அழந்துவிடாமல் வனத்துறையினர் பாதுகாத்து வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள வேளாங்கன்னி மாதா ஆலயமும் பிரசித்திபெற்றது. மேற்கண்ட சுற்றுலாத்தலங்கள் வால்பாறை - நல்லமுடி (முடீஸ்) சாலையில் அமைந்துள்ளன.

தலநார் என்ற இடமும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. வால்பாறை பொள்ளாச்சி ரோட்டில் கவர்க்கல் என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் தலநார் சாலையில் சிற்றருவிகளும், இயற்கை காட்சிகளும், சோலைகளும் தவழந்து மேகமூட்டமும், தொடர்பனியும் நிறைந்த பகுதியாக இது காட்சி அளிக்கிறது. மேலும் டைகர் வேலி எனப்படும் பள்ளத்தாக்கு காட்சியும், 9வது கொண்டை ஊசி வளைவில் ஆழியார் அணையின் எழில் மிகு தோற்றமும் காண அழகானவை.

இது தவிர குரங்குமுடியில் சோலையார் அணையின் அழகும், சோலையார் அணையில், அணைக்கட்டின் பிரம்மாண்ட தோற்றமும் காண கண்கள் கோடி வேண்டும். மேலும் எண்ணற்ற சுற்றுலா ஸ்தலங்கள் வால்பாறை பகுதியில் உள்ளன. வனத்துறையின் அனுமதி பெற்று செல்லகூடிய இடங்களும் உண்டு.

மேலும் வருடம்தோறும மே மாதம் 3 நாட்கள் கோடை விழாவும் நடைபெற்று வருகிறது. கோடை விழாவை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிந்து வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள் வால்பாறை சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு வரை படத்தில் அறிவிக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் செய்யப்பட்டும் வருகிறது.

வால்பாறை பகுதிக்கு தாவரவியல் பூங்காவும், சிறிய படகு இல்லமும் இருந்தால் வால்பாறை சுற்றுலா துறையில் தன்நிறைவை அடையும்.

வால்பாறையின் கால நிலை மிகவும் சிறப்பம்சம் பெற்றது. கால நிலையை அனுபவிக்கவே திரளாக சுற்றுலாப்பயணிகள் வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

- வால்பாறை ஜெபா

 

 

 

Links

Advertisement

STAY

@Hornbill castle

3 படுக்கை அறைகளுடன், அமரும் அறையும், சாப்பிடும் அறையும், சமையல் அறையும் உள்ள, சிறப்பான, சுத்தமான குடும்பத்தினருக்கு ஏற்ற, வால்பாறை டவுனில் இருந்து 1கி.மீ. அமைதி நிலவும் இடத்தில் உள்ள காட்டேஜ்.